
சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திற்காக தமிழக அரசு செலுத்திய 68 கோடி ரூபாய் வைப்பு தொகையை நீதிமன்ற உத்தரவையடுத்து வட்டியுடன் மீண்டும் தமிழக அரசுக்கே அனுப்பப்பட்டது.கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.அதற்கு ஏதுவாக போயஸ் தோட்டம் இல்லத்தை அரசுடமையாக்குவதற்காக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் அதிமுக அரசு ரூ.68 கோடியை கடந்த 2020ஆம் ஆண்டு டெபாசிட் செய்திருந்தது.இந்நிலையில் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் என ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கை உயர் நீதிமன்றம் அறிவி்த்த நிலையில், மற்றொரு வழக்கில் வேதா நிலையம் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என்றும், அரசு கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தும் தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.இந்நிலையில் வேதா நிலையம் இல்லம் தொடர்பான வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை பெருநகர 6-வது உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் சென்னை வருவாய் கோட்டாட்சியர் தாக்கல் செய்திருந்த மனுவில், ”வேதா நிலையம் இல்லத்துக்காக தமிழக அரசு நீதிமன்றத்தில் செலுத்தியிருந்த ரூ.68 கோடி டிபாசிட் தொகையை திரும்பப்பெறவும், கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கு 6-வது உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் எஸ்.ஷாஜகான் ஆஜராகி டிபாசிட் தொகை ரூ. 68 கோடியை வட்டியுடன் திருப்பி செலுத்த நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும், என கோரினார்.அதையடுத்து நீதிபதி அந்த தொகையை அரசுக்கு திருப்பி செலுத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படி நீதிமன்ற பதிவாளர் கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டிருந்த இந்த தொகை வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 70 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 713 ஆக தென் சென்னை வருவாய் கோட்டாட்சியரின் கணக்குக்கு திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.