கேரளாவில் பறவை காய்ச்சல்: கோழி, முட்டைகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை.!

கேரள: ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சலால் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்துகள், கோழிகள் உள்ளிட்ட பறவை இனங்கள் இறந்தன. இதைத்தொடர்ந்து தமிழக அரசு உத்தரவின் பேரில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கேரளாவின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புவதால் தமிழகத்துக்குள் பறவை காய்ச்சல் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து கால்நடை பராமரிப்பு துறையினர் கூடலூர் பகுதியில் எல்லைகளில் உள்ள நாடுகாணி, சோலாடி, தாளூர், பாட்டவயல், நம்பியார்குன்னு உள்பட அனைத்து சோதனை சாவடிகளிலும் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும் மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கோழிகள், முட்டை மற்றும் வாத்து கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினர் கூறும்போது, கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர், பந்தலூர் தாலுகாவுக்குள் வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. இதேபோல் கோழிகள், முட்டைகள் ஏற்றும் வாகனங்கள் வந்தால் திருப்பி அனுப்பப்படும்.மேலும் சுல்தான்பத்தேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து கறிக்கோழிகள் பந்தலூர் தாலுகாவுக்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே வியாபாரிகள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கால்நடை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *