
கேரள மலைப் பகுதியில் மூன்று நாள்களாக சிக்கித் தவித்த இளைஞர் ராணுவத்தின் உதவியுடன் மீட்கப்பட்டார். இதற்கு கேரள அரசின் கருவூலத்திலிருந்து சுமார் ரூ.75 லட்சம் செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில், மிக ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த பாபுவுக்கு வீடு கட்டித்தரப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே. ஸ்ரீகந்தன் அறிவித்துள்ளார்.இதற்கிடையே, பாபுவை மீட்க செலவிடப்பட்ட தொகை குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளன. அதன்படி, பாபுவை மலை இடுக்கிலிருந்து மீட்க சுமார் 75 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாகவும், இது குறித்து பேரிடர் மேலாண்மைக் கழகத்திலிருந்து கிடைத்த முதற்கட்ட தகவலில், கடலோரக் காவல்படை ஹெலிகாப்டர் மற்றும் இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டர், இந்திய ராணுவத்தினர், மீட்புப் படையினருக்கு மட்டும் இதுவரை ரூ.50 லட்சம் செலவிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.கடலோரக் காவல்படையின் ஹெலிகாப்டரைப் பயன்படுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 லட்சம் கட்டணம் என்றும், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட மீட்புப் படை வீரர்களுக்கு மட்டும் ரூ.15 லட்சம் செலவிடப்பட்டுள்ளது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புலா மலைப் பகுதிக்கு திங்கள்கிழமை பாபு(வயது 23) உள்ளிட்ட மூன்று இளைஞர்கள் டிரக்கிங் சென்றுள்ளனர். அப்போது பாபு என்ற இளைஞர் கால் தவறி செங்குத்தான மலை இடுக்கில் விழுந்துள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை மற்றும் மீட்புப் படையினரால் இளைஞரை மீட்க முடியவில்லை. தொடர்ந்து கடலோர காவல் படையின் ஹெலிகாப்டர் மூலம் முயற்சி செய்தும் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.இதையடுத்து வெலிங்டனிலிருந்து மலையேற பயிற்சி பெற்ற ராணுவக் குழுவும் பெங்களூருவிலிருந்து பாராசூட் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை தொடங்கினர்.மூன்று நாள்கள், உணவு, குடிநீர் இல்லாமல் தவித்த இளைஞள், பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின் ராணுவ உதவியுடன் மீட்கப்பட்டார். தொடர்ந்து, முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.bahujankural news என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
செய்தியாளர் சிவபெருமான்