
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றுவந்த பள்ளிச் சிறுமி ஒருவர் இறந்தார். அவரை திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் மகன், அவர் நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக, இறந்த சிறுமியின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதையடுத்து, காவல்துறையினர் அவர்கள் புகாரின்பேரில் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரின் மகனை விசாரணை தேவைகளுக்காக கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடத்தில் பேசிய சிறுமியின் தாய், “கடந்த திங்கள்கிழமையன்று திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரின் மகன் பிறந்தநாள் விழாவுக்குச் சென்று வந்த என் மகளுக்கு அதிக ரத்தப்போக்கு மற்றும் வயிற்றுவலி இருந்தது. அதையடுத்து, அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்பட்டோம். ஆனால், அவர் அதற்குள் வீட்டிலேயே இறந்துவிட்டார். அதையடுத்து, பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர்களிடம் சென்று விசாரித்ததில், திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகரின் மகன் மற்றும் அவர் நண்பர்களால் என் மகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது” என்றார்.மேலும், தன் மகளின் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு முன்பாகவே, ஒரு கும்பல் அவர் உடலை தகனம் செய்ய வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.இந்த விவகாரம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பானதையடுத்து, இதுகுறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் சஷி பஞ்சா, “சிறார்களையும், பெண்களையும் பாலியல் வன்கொடுமை செய்வது ஆளுங்கட்சியால் முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று. இந்த விவகாரத்தில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது. காவல்துறை இந்தச் சம்பத்தில் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க முடிந்த அளவு அனைத்தையும் செய்யும்” எனக் கூறினார்.