
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளியில் அக்கவுண்டன்சி வகுப்பில் ஆசிரியராக இருப்பவர் கிறிஸ்துதாஸ். இவர் வகுப்பில் பாடம் நடத்தும்போது இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பாடம் நடத்தியதாக இரண்டு மாணவிகள் புகார் அளித்தனர். மேலும், மாணவிகளின் பெற்றோர் இரணியல் அரசுப் பள்ளியில் கடந்த 6-ம் தேதி சென்று ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாது குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு மாணவிகள் புகார் அளித்தனர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி புகாரில் உண்மை இல்லை என கூறினர். ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஆனதால், நேற்று நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் மாணவிகள் புகார் அளித்தனர். இதையடுத்து ஆசிரியர் கிறிஸ்துதாஸ் மீது குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர்.