கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராடல் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.!

மாசிமகப் பெருந்திருவிழாவையொட்டி, கும்பகோணம் மகாமகக் குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீர்த்தவாரியின்போது ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று மாசி மகப் பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதே விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.நிகழாண்டு கும்பகோணம் ஆதிகும்பேசுவரர், காசி விசுவநாதர், அபிமுகேசுவரர், காளஹஸ்தீசுவரர், கெளதமேசுவரர், வியாழசோமேசுவரர் ஆகிய சிவன் கோயில்களில் பிப்ரவரி 8ஆம் தேதியும், சக்கரபாணி கோயில், ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய 3 வைணவ கோயில்களில் பிப்ரவரி 9ஆம் தேதியும் மாசி மகப் பெருந்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் சுவாமி வீதியுலா உள்ளிட்ட வைபவங்கள் நடைபெற்று வந்தன.சிவன் கோயில்களில் மீதமுள்ள பாணபுரிசுவரர், கம்பட்டவிசுவநாதர், கொட்டையூர் கோடீசுவரர், சாக்கோட்டை அமிர்தகலசநாதர், ஏகாம்பரேசுவரர், நாகேசுவரர் ஆகிய 6 சிவன் கோயில்களில் மாசி மகத்தன்று மட்டும் ஏக தின உற்சவமாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.மாசி மக நட்சத்திர நாளான வியாழக்கிழமை நண்பகல் 12 மணியளவில் ஆதிகும்பேசுவரர், காசி விசுவநாதர், அபிமுகேசுவரர், கௌதமேசுவரர், பாணபுரீசுவரர், அமிர்தகலசநாதர், கம்பட்ட விசுவநாதர், கோடீசுவரர், ஏகாம்பரேசுவரர், நாகேசுவரர், சோமேசுவரர், காளஹஸ்தீசுவரர் ஆகிய 12 சிவன் கோயிலிருந்து சுவாமி – அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்டு, ரிஷப வாகனங்களில் மகாமகக் குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருளினர்.

இதைத்தொடர்ந்து அந்தந்த கோயிலின் அஸ்திர தேவர்களுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அஸ்திர தேவர்கள் மகாமகக் குளத்தில் நீராடியதைத் தொடர்ந்து, நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.சக்கரபாணி கோயில் தேரோட்டம்மாசி மகத்தையொட்டி, கும்பகோணம் சக்கரபாணி கோயிலில் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.இதில் சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயாருடன் சக்கரபாணிசுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர், இத்தேரை நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம்மாசி மகத்தையொட்டி, கும்பகோணம் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் மின்னொளி அலங்காரத்திலும் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *