கும்பகோணம் பகுதியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய வாலிபர் சிக்கினார்- ஏ.டி.எம். பணம் கொள்ளையில் தொடர்பா.? காவல்துறை விசாரணை.!

கும்பகோணம்: திருவண்ணாமலையில் ஒரே நாளில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை கியாஸ் வெல்டிங் மூலம் உடைத்து ரூ.72 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றனர். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.அதன்படி தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுப்படி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் அனைத்து எல்லைகள் உள்பட 48 இடங்களில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளனர். அதன்படி கும்பகோணம் அருகேதிருநீலக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சீனிவாசநல்லூர் அபிராமி நகரில் திருவிடைமருதூர் போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து விசாரணை நடத்திய பிறகே செல்ல அனுமதித்தனர். அப்போது வெள்ளை நிற டாட்டா இண்டிகா கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதனை காவல்துறை வழிமறித்தனர். உடனே காரில் இருந்த 4 பேரும் காரை விட்டு இறங்கி தப்பி ஓடினர். அதில் ஒருவரை மட்டும் மடக்கி பிடித்தனர். இதையடுத்து காரை சோதனையிட்டனர். அதில் முகமூடி, மூன்று செல்போன், இரண்டு டைரி, கத்தி ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். மேலும் காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து அந்த மர்ம நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் கும்பகோணத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 26) என்பதும், பூட்டிய வீடுகளில் சிலருடன் சேர்ந்து கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம், திருவண்ணாமலை ஏ.டி.எம். பணம் கொள்ளையில் தொடர்பு உள்ளதா ? காரில் இருந்து தப்பி ஓடியவர்கள் யார் ? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட முகமூடியை பயன்படுத்தி வேறு எங்கையாவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா ? எனவும் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *