
பெங்களுருவில் குத்துச் சண்டை போட்டியின்போது 23 வயதான இளம்வீரர் சுருண்டுவிழுந்து உயிரிழந்தார். இது குறித்து ஜனன ஜோதி நகர் காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.கர்நாடக மாநிலம் பெங்களுருவில் உள்ள ஜனன ஜோதிநகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பை சர்வதேச கட்டடத்தில் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி ஜூலை 10ஆம் தேதி நடந்தது.இந்தப் போட்டியில் மைசூருவில் வசிக்கும் சுரேஷ், விமலா தம்பதியரின் மகனான நிகில் (23) என்ற இளைஞர் கலந்துகொண்டார்.இந்த நிலையில் போட்டியின்போது எதிர்தரப்பு வீரர் முகத்தில் குத்தியதில் நிகில் படுகாயமுற்றார். இது குறித்து போட்டி நடத்திய நிர்வாகத்தினர் நிகிலின் தாயார் விமலாவிடம் ஜூலை 10ஆம் தேதி தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், எதிரணி வீரர் முகத்தில் குத்தியதும் நிகில் சுருண்டு விழுந்து பேச்சு மூச்சுயின்றி கிடக்கும் காணொலி காட்சியும் வெளியானது.இதற்கிடையில், படுகாயமுற்ற நிகில் சிகிச்சைக்காக ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நினைவு திரும்பாமலே நிகில் மரணித்தார்.இது குறித்து ஜனன பாரதி காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில் நிகிலின் மரணத்துக்கு போட்டி நடைபெற்ற இடத்தில் ஆக்ஸிஜன் உள்ளிட்ட முதலுதவி வசதிகள் சரிவர இல்லாததே காரணம் எனப் புகார் எழுந்துள்ளது.மேலும் போட்டி அமைப்பாளர் நவீன் ரவி சங்கரின் மொபைல் போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது என உயிரிழந்த குத்துச் சண்டை வீரர் நிகிலின் தந்தை சுரேஷ் குற்றஞ்சாட்டினார்.இதற்கிடையில் குத்துச் சண்டை போட்டி அமைப்பாளர்கள் மீது கவனக் குறைவாக மரணத்தை ஏற்படுதத்துதல் (ஐபிசி 304 (ஏ)) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.