
சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவ மழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் நிலையில் பல பகுதிகளில் சாலைகளில் மழைத்தண்ணீர் தேங்கி சேதம் அடைந்து உள்ளன. பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். மழையால் ஓட்டேரி, பெரம்பூர், பகுதிகளில் சாலைகள் அனைத்தும் பல இடங்களில் சேதமடைந்து உள்ளன. பல்லாங்குழி சாலைகளாக மாறியுள்ளதால் வாகனங்கள் தடுமாறுகின்றன. மழையால் சேதமான சாலைகள் பல்லாங்குழிகள் போன்று காணப்படுவதால் மோட்டார் சைக்கிள், கார், வேன் வாகனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பல சாலைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளன. மேலும் மழையின் போது சாலையில் உள்ள பள்ளங்களில் வாகனத்தில் செல்வோர் தவறி விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன. மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். குண்டும் குழியுமாக மாறிய சாலைகளில் செல்லும் ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்கள் பழுதாகி விடுகின்றன.எனவே மழையால் பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.