
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி, மதுரை, கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகிற பிப்ரவரி 18, 19 தேதிகளில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக முதல்முறையாக தமிழகம் வருகிறார். இதையடுத்து பாதுகாப்புப் பணியில் 1500 போலீஸார் ஈடுபடவுள்ளனர்.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், கோவை ஈஷா யோகா மையத்திலும் குடியரசுத் தலைவரின் சிறப்புப் பாதுகாப்புக் குழு ஏற்கனவே முதல் சுற்று ஆய்வு நடத்தியது.பிப்ரவரி 18-ம் தேதி தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் காலை 11.50 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வரும் முர்மு, மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.பின்னர், கோவைக்குச் செல்லும் குடியரசுத்தலைவர் ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்கிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலும், ஈஷா யோகா மையத்திலும் எஸ்பிஜி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.மதுரையில் குடியரசுத் தலைவரின் பாதுகாப்புப் பொறுப்பை மதுரை நகரக் காவல் ஆணையர் நரேந்திரநாத் நாயரும், கோவை மாநகர காவல் ஆணையராக வி.பாலகிருஷ்ணனும் பொறுப்பேற்கவுள்ளனர்.குடியரசுத் தலைவரின் வருகை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய உளவுத் துறை தகவல் அளித்துள்ளது.