
சிவகாசி: சிவகாசி அருகே குடிநீர் தொட்டியில் நாய் சடலம் இருந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் குடிநீர் மேல்நிலை தொட்டி ஒன்று இருந்துள்ளது. இதிலிருந்து அந்த கிராமத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனிடையே வழக்கம் போல் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக கடந்த இரண்டு நாட்களாக தொட்டியில் நீர் நிரப்பபடாமல் இருந்தது. இந்த நிலையில் அந்த தொட்டியில் மர்ம நபர் இறந்த நாயின் சடலத்தை வீசி சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அடுத்து குடிநீர் தொட்டிக்குள் இறந்த நாயின் சடலத்தை போட்ட நபரை கண்டுப்பிடித்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து சிவகாசி எஸ்.பி. தனஞ்ஜெயன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டதால் அந்த குடிநீர் தொட்டி அருகே காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சமீபமாக புதுக்கோட்டை வேங்கைவயல் பகுதியில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த குடிநீர் மேல்நிலை தொட்டியில் மனிதக்கழிவுகள் இருந்தது மேலும் கடலூரில் குடிநீர் தொட்டியில் உயிரிழந்தவரின் சடலம் ஒன்று கலந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.