
சென்னை: தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த ஜெகன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இச்சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து பழனிசாமி கேள்வி எழுப்பினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த விளக்கம்: ஜெகன் என்பவரை சங்கர், அதிமுக கிளைச்செயலாளர் உள்ளிட்ட மூவர், ஆயுதங்களால் தாக்கியதில், ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், சங்கரின் மகள் சரண்யாவை, டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன் காதலித்து கடந்த ஜனவரியில் திருமணம் செய்தார்.இதனால் ஆத்திரமுற்ற சங்கர் உள்ளிட்டோர் ஜெகனை கொலை செய்துள்ளனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர் அதிமுக கிளைச்செயலாளராக இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. தற்போது சங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு பணிகளும், நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது போன்ற சம்பவங்களை அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, மனித நேயத்துடன் தடுக்க முன்வர வேண்டும் என அனைத்து எம்எல்ஏ.,க்களையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் விளக்கமளித்தார்.அதிமுக கிளைச்செயலாளர் என முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக.,வினர் அமளியில் ஈடுபட்டனர்.