
பெரம்பலுார் : சொந்த கிராமத்துக்கு, 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற உதவிய கிராம வாலிபருக்கு, பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.பெரம்பலுார் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகதீஸ்குமார், 40; மலேஷியாவில் தொழிலதிபராக உள்ள இவர், ‘ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேஷன்’ சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.இதற்காக, அந்நாட்டின் மிக உயரிய விருதான, ‘டத்தோ’ விருது பெற்றுள்ளார். அவர், தன் சொந்த ஊரான பூலாம்பாடிக்கு, சாலை, குடிநீர், மின்விளக்கு, கழிவு நீர் கால்வாய் என அடிப்படை வசதிகளை செய்து தர முடிவு செய்தார். இதற்காக, ஊர் முக்கியஸ்தர்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் கிராமம் முழுதும் பார்வையிட்டார்.பேரூராட்சி பகுதியாக பூலாம்பாடி இருப்பதால், பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, ‘நமக்கு நாமே’ திட்டத்தில், அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான பணிகளை நிறைவேற்றவும், அதற்கு கிராம மக்களின் பங்களிப்பு தொகையான, 33 கோடி ரூபாயை பிரகதீஸ்குமார் தருவதாகவும் உறுதியளித்தார்.அதன்படி, ‘ப்ளஸ் மேக்ஸ் ஹெல்த் கேர் பவுண்டேஷன்’ சார்பில், முதல்கட்டமாக, 90 லட்சம் ரூபாய்க்கான வங்கி வரைவோலையை, பூலாம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சிவராமனிடம், நேற்று முன்தினம் வழங்கினார்.ஓரிரு நாட்களில் கட்டமைப்பு பணிகள் துவங்க உள்ளன. தற்போது வரை போக்குவரத்து வசதி பெரிய அளவில் இல்லாத ஒரு கிராமத்தில் பிறந்து, வளர்ந்த இளைஞர் பிரகதீஸ்குமார், மலேஷியாவில் மிகப்பெரிய தொழிலதிபராக வலம் வருகிறார்.இருந்தாலும், சொந்த ஊருக்கு, 33 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, நிதியுதவி வழங்கியிருப்பதால், அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அவரை பாராட்ட, 99429 -88888 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.