கியாஸ் விலை உயர்வு எதிரொலி- ஓட்டல் உணவு பொருட்கள் விலை 6-ந் தேதி முதல் உயர்த்தப்படுகிறது.!

சென்னை:வணிக பயன்பாட்டுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் ஒரே நாளில் ரூ.268 உயர்த்தப்பட்டது. இதனால் சிலிண்டர் விலை ரூ.2406 ஆக அதிகரித்துள்ளது.இந்த விலை உயர்வு காரணமாக ஓட்டல் பண்டங்கள் விலையும் உயருகிறது. டீ விலை ரூ.2-ம் காப்பி விலை ரூ.3-ம் உயர்த்தப்பட்டுள்ளது.உணவு பண்டங்களின் விலையையும் 20 சதவீதம் வரை உயர்த்த ஓட்டல் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி சென்னை ஓட்டல்கள் சங்க செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:-எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தி இருப்பது உணவக தொழிலை கடுமையாக பாதிக்கும். கடந்த ஆண்டு ரூ.1200 ஆக இருந்த சிலிண்டர் விலை ஒரே ஆண்டில் ரூ.2400-க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது.அது மட்டுமல்ல கடந்த ஆண்டு எண்ணை லிட்டருக்கு ரூ120 ஆக இருந்தது. இப்போது ரூ.180 ஆக உயர்ந்துள்ளது. அசிரி, பருப்பு போன்ற மூலப் பொருட்கள் அனைத்துமே விலை உயர்ந்துவிட்டது.இதனால் உணவு பண்டங்கள் தயாரிக்க 16 முதல் 20 சதவீதம் செலவினம் அதிகமாகும். இந்த செலவினங்களை ஈடுகட்ட உணவு பண்டங்களின் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை.இது தொடர்பாக கலந்து பேசி முடிவெடுக்க வருகிற 6-ந் தேதி ஓட்டல் அதிபர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய கூட்டத்தில் விலை உயர்வு முடிவு செய்யப்படும். 10 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். 16 முதல் 20 சதவீதம் உயர்த்த வேண்டும். அதன் பிறகு படிப்படியாக சூழ்நிலைக்கு ஏற்ப உயர்த்தப்படும்.சென்னையில் மட்டும் சிறிய ஓட்டல்கள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை 15 ஆயிரத்துக்கும் மேல் உள்ளது.உணவு பண்டங்களை பொறுத்தவரை சிறிய கடைகளில் மிக குறைந்த விலையாவும், நடுத்தர கடைகளில் அதற்கு ஏற்பவும் உயர்தர ஓட்டல்களில் அதற்கு ஏற்பவும் விலைகள் இருக்கும்.பயன்படுத்தும் பொருட்கள், செலவினங்கள், வாடகை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உள்ளிட்ட செலவினங்களின் அடிப்படையில் உணவு பண்டங்கள் விலை நிர்ணயிக்கப்படுகிறது.சென்னையை பொருத்த வரை சைனீஸ் உணவு வகைகளைவிட தென்னிந்திய உணவு வகைகள்தான் அதிக அளவில் விற்பனையாகும். உதாரணமாக ரூ.30-க்கு விற்ற இட்லி இனி ரூ.33ஆக உயரும்.மத்திய அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்து உணவகங்களுக்கு மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்க வேண்டும். அப்படியானால்தான் விலை ஏற்றத்தை தவிர்க்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.உணவு பண்டங்களை பொறுத்தவரை இட்லி, பூரி, பொங்கல் போன்றவை ரூ.5 உயரும். சாப்பாடு, பிரியாணி வகைகள் ரூ.20 வரை உயரும் என்று ஓட்டல் நிர்வாகி ஒருவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *