
சென்னை : அரசு மருத்துவமனைகளில், காலாவதியாகாத மருந்துகள் வினியோகிப்பதை உறுதி செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில், மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் பொறுப்பாளராக பணியாற்றிய முத்துமாலை ராணி என்பவர், தனக்கு வர வேண்டிய ஓய்வூதிய பலன்களை வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாக மருந்து வாங்கியதாகவும், அது காலாவதியாகி அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகவும், முத்துமாலை ராணிக்கு எதிராக புகார் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு: ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் அளிக்கப்படுவதாக, பொது தளங்களில் குற்றச்சாட்டுகள் வருகின்றன. கொரோனாவுக்கு பின் குரங்கம்மை, வைரஸ் காய்ச்சல் என, பல்வேறு நோய் பரவல்கள் தொடர்கின்றன. இதற்கான காரணங்களை கண்டுபிடிக்கவில்லை.நோய் பரவல் நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபடுகிறதா என்பதை விசாரிக்க வேண்டும். நோய் பரவலுக்கான காரணங்களை தெரிவிக்கவும், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருந்து வியாபாரிகளின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தவும், அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள், உண்மையில் ஏழை மக்களை சேர்வதில்லை’ என, நீதிபதி வேதனை தெரிவித்தார்.வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. சுகாதாரத் துறை செயலர் தாக்கல் செய்த அறிக்கையில், புதிய நோய் பரவலுக்கான பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. அப்போது நீதிபதி, “கொள்முதல் செய்யும் மருந்துகள் காலாவதியாக விடாமல்” பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பலாம். இதுகுறித்து, உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். காலாவதி மருந்துகளை சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனங்கள் திரும்ப பெற வேண்டும். காலாவதி மருந்து வினியோகம் குறித்து புகார் அளிக்க வசதி ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.இதுகுறித்து, கூடுதல் அறிக்கை தாக்கல் செய்வதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, விசாரணையை, வரும் 9ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளி வைத்தார்.