காரில் கடத்தப்பட்ட காதல் தம்பதி! – கால்களில் விழுந்து கதறல்… மீட்ட பொதுமக்கள்.!

கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகே காரில் சென்று கொண்டிருந்த ஓர் தம்பதி, எங்களை கடத்தறாங்க என்று கூச்சல் போட்டபடி இறங்க முயற்சி செய்தனர். அங்கிருந்து பொதுமக்கள் போக்குவரத்து காவலரிடம் தகவல் சொல்லி காரில் இருந்த தம்பதியை மீட்டனர்.

“வீட்டை மீறி கல்யாணம் பண்ணதால கடத்தறாங்க. கத்திய கழுத்துல வெச்சு மிரட்டறாங்க. எங்களை பிரிச்சுடுவாங்க. காப்பாத்துங்க” என்று அங்கிருந்தவர்களின் கால்களில் விழுந்து கதறினார்கள்.

போலீஸ் நடத்திய விசாரணையில் காரில் இருந்த இளைஞர் மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (22). இவரும், சினேகா (19) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விஷயம் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்துள்ளனர்.

மேற்படி தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில், காதல் ஜோடியை தொடர்பு கொண்ட பெண் வீட்டார், உங்களை சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லி காரில் அழைத்து சென்றுள்ளனர். அவிநாசி சாலை லட்சுமி மில்ஸ் சிக்னல் அருகில் சென்று கொண்டு இருந்த போது,

காரில் ஏறிய சிலர் காதல் தம்பதியை மிரட்டி தாக்க முயற்சி செய்ததாக தெரிகிறது. இதனால் அச்சத்தில் தம்பதி கூச்சல் போட்டுள்ளனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.

இந்த சம்பவம் குறித்து பெண் வீட்டார், “புதிதாக திருமணம் ஆனதால் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தோம். அவர்களாக பயந்து கொள்கின்றனர்.” என்று கூறினர்.

இரண்டு தரப்பினரையும் பந்தயசாலை காவல்நிலையம் அழைத்து சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். பிறகு, எச்சரித்துவிட்டு அவர்களை அனுப்பிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *