
மதுரை: ஜனாதிபதியாக பதவி ஏற்றபின்பு, திரவுபதி முர்மு முதன் முறையாக இன்று தமிழகம் வருகை வந்துள்ளார். இதன்படி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு 2 நாள் பயணமாக மதுரைக்கு வந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அதன்பின், நண்பகலில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் தக்கார் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சிவராத்திரியான இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தள்ளார்.கோவிலில் இருந்து 12.45 மணிக்கு மேல் புறப்பட்டு, அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு சென்றார். அவர் செல்லும்போது, ஜனாதிபதியை காண்பதற்காக வழி நெடுகிலும், பொதுமக்கள் திரண்டிருந்தனர். இதனை தொடர்ந்து, காரில் இருந்து கீழே இறங்கிய ஜனாதிபதி திரவுபதி முர்மு கூடியிருந்த மக்களை சென்று சந்தித்து அவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.அதன்பின்னர், கையசைத்தபடியே விடை பெற்று விட்டு, காரில் ஏறி சென்றுள்ளார்.