
திருச்சி: திருவெறும்பூர் அருகேயுள்ள நொச்சிவயல் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் – சாந்தி தம்பதியர். இவர்களின் மகள் வித்யா லட்சுமி (19). திருவெறும்பூர் மணியம்மை நகரில் உள்ள தாத்தா வீட்டில் தங்கி கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மே 17-ம் தேதி வித்யா லட்சுமிக்கு திடீரென வயிற்று வலி மற்றும் உடல் சோர்வு ஏற்பட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் வித்யா லட்சுமியின் உடலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்திருக்கிறது.

அதையடுத்து அவரிடம் விசாரிக்கையில் ஒரு பையன் என்னை காதல் செய்வதாக சொல்லிட்டு பின்னாடி வந்து டார்ச்சர் செஞ்சிட்டு இருந்தான். கோவத்துல அவனை செருப்பால அடிச்சிட்டேன். மே 12-ம் தேதி காலேஜ் போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். அப்போ என்னை டார்ச்சர் பண்ண பையனோட சேர்த்து 3 பேர் என்னை வலுக்கட்டாயமாக தூக்கிட்டு போய் விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்துட்டாங்க’ என்று வாக்குமூலம் அளித்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்துவந்த வித்யா லட்சுமி 22/05/22 அன்று மாலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதையடுத்து ‘வித்யா லட்சுமியின் இறப்பிற்குக் காரணமான அந்த 3 இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை வித்யா லட்சுமியின் உடலை வாங்க மாட்டோம். எங்கள் அனுமதியின்றி காவல்துறை எப்படி பிரேதப் பரிசோதனை செய்யலாம். அவசர அவசரமாக உடலை அடக்கம் செய்யச் சொல்லி காவல்துறை அழுத்தம் கொடுத்தது ஏன்? என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் மலைக்கோயில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருச்சி – தஞ்சை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. கூட்டத்தை கலைந்துபோகச் சொல்லி காவல்துறையினர் அறிவுறுத்தியும் கலைந்து போகாததால் தடியடி நடத்தி போலீஸார் கூட்டத்தைக் கலைத்தனர். இந்தவிவகாரம் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் எத்தனை பேருக்குத் தொடர்பு உள்ளது என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.