`காங், பாஜக-வைச் சேர்ந்த பட்டியலினத்தவர்கள் முதல்வரானாலும்… எதையுமே செய்ய முடியாது!” – மாயாவதி குற்றச்சாட்டு.!!

ஏப்ரல் 14, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பியான டாக்டர் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில், அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மாயாவதி, “நாட்டில் நிறைய வகுப்புவாத கட்சிகள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாகக் காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகள் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை எம்.எல்.ஏ-வாக, எம்.பி-யாக, அமைச்சராக, முதல்வராக ஏன் குடியரசுத் தலைவராக ஆக்கினாலும் கூட, அவரால் அவரின் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் முடியுமே தவிர, அவர் சார்ந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எதையுமே செய்ய முடியாது.அப்படி அவர்கள் தங்கள் சமூகத்திற்கு ஏதாவது செய்ய முயற்சி செய்தால், கட்சியிலிருந்தும், ஆட்சியிலிருந்தும் அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். பாபா சாகிப் அம்பேத்கரின் போராட்டங்களையும், லட்சியங்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் இதுபோன்ற கட்சிகள் தங்களின் அரசியல் சுயநலத்திற்காகப் போட்டிபோட்டுக்கொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

இது வஞ்சகமே தவிர வேறொன்றுமில்லை. ஏனென்றால் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களை அடிமைகளாக வைத்திருப்பதை உறுதி செய்யும் கொள்கைகளில் இவர்கள் தொடர்ந்து பணியாற்றுகின்றனர்.இதுபோன்ற செயல்களில் காங்கிரஸுக்குப் பிறகு பா.ஜ.க முன்னணியில் இருப்பதை எளிதாகக் காணலாம். இந்த இரு கட்சிகளின் ஆட்சியின் கீழ் பிற்படுத்தப்பட்டோரின் மீதான சுரண்டலும், அட்டூழியங்களும் நின்றபாடில்லை. அவர்களின் சமூக நிலையும், பொருளாதார நிலையும் மேம்படவில்லை. அம்பேத்கரின் நோக்கம் நிறைவேறாமல் இருப்பதற்கும் இதுவே காரணம்” எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *