கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி மாணவர்கள் திடீர் போராட்டம்..!!

கள்ளக்குறிச்சி நகராட்சி கேசவலு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பள்ளியின் அருகில் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் சுற்றுச்சுவர் சேதம் அடைந்துள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ள கட்டிடத்தில் படிக்கும் வகையில் தற்காலிகமாக இடம் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால் இங்குள்ள சில கட்டிடங்கள் கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடங்களாக செயல்பட்டு வருவதால் மாணவர்கள் படிப்பதற்கு போதிய இடவசதி இல்லாமல் வரண்டா மற்றும் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தொடக்கப்பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பள்ளியில் படிக்கும் வகையில் அருகில் உள்ள திறந்தவெளி கிணற்றின் சுற்றுச்சுவர் மற்றும் பள்ளியை சீரமைத்து தர கோரிக்கை வைத்தனர். பின்னர் மாணவர்களின் பெற்றோர் கலெக்டர் ஸ்ரீதரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பெற்றோருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். படிக்க இடவசதி கேட்டு மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்திய சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *