கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்.!

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உருவாக்கப்பட்டு அதனுடன் 18 வகை தொழிலாளர் நலவாரியங்கள் செயல்படுகிறது. இதில் உறுப்பினராக 18 முதல் 60 வயது வரை உள்ள தொழிலாளர்கள் பதிவு செய்து அரசின் நலத்திட்டத்தை பெறுகின்றனர். இவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். உறுப்பினர்களுக்கு திருமணம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.மேலும் கொத்தனார், பற்றவைப்பவர்கள், மின்சார வேலை, குழாய் பொருத்துனர், மரவேலை மற்றும் கம்பி வளைப்பவர்கள் உள்பட பல தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு கட்டுமான கழகம் மூலம் 3 மாத திறன் பயிற்சி, ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படவுள்ளது. 3 மாத கால பயிற்சியில் முதல் மாதம் தையூரில் அமையவுள்ள கட்டுமானக் கழக பயிற்சி நிறுவனத்திலும், 2-வது மாதம் காஞ்சீபுரம் மாவட்டம் நீவலூரில் உள்ள எல் அண்ட் டி. கட்டுமான திறன் பயிற்சி நிலையத்திலும் பயிற்சி வழங்கப்படும்.வேலைவாய்ப்புஇப்பயிற்சியை பெற உள்ளவர்கள் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அல்லது ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும். 18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி கட்டணம், உணவு, தங்குமிடம் இலவசம். பயிற்சி பெறுவோருக்கு எல் அண்ட் டி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும்.மேலும் ஒரு வார பயிற்சி, தையூரில் கட்டுமானக்கழகம் வழங்கும். 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் இந்த பயிற்சி பெறலாம். பயிற்சி பெறுபவர்களுக்கு தினமும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தலா ரூ.800 வழங்கப்படும். இத்தொகையில் உணவுக்கு மட்டும் பிடித்தம் செய்யப்படும். எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த தகுதியானவர்கள், எண் 1, நல்ல தண்ணீர் குளத்து தெரு, ஏமப்பேர், சேலம் மெயின் ரோடு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் படிவத்தை பூர்த்தி செய்து வழங்கலாம்.இந்த தகவலை கள்ளக்குறிச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *