
மார்பகப் புற்றுநோய் என்பது பெண்களுக்கு வரும் புற்று நோய்களுள் ஒன்று. இதில் இறப்பு என்பது மிகக் குறைவானது என்றாலும் மார்பக புற்றுநோய் குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.மார்பக புற்றுநோயை குணப்படுத்த அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகிய சிகிச்சை முறைகள் உள்ளது. இந்நிலையில் தற்போது கதிர்வீச்சு சிகிச்சை ஒன்றை உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். இதற்காக மாணவருக்கு உளுந்தூர்பேட்டையில் பாராட்டு விழா நடத்தப்பட்டு இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டுள்ளது.கதிரியக்க சிகிச்சையின் போது புற்றுநோய் அல்லாத மார்பகத்தை ரேடியேஷன் டோஸ் அடைவது குறிப்பிடத்தக்க பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கேன்சர் இருக்கும் மார்பகத்திற்கு அதிகபட்ச டோஸ் கொடுக்க முடிவதில்லை. அதனால் போலஸ் எனப்படும் திசுக்களுக்கு சமமான பொருளைப் பயன்படுத்தி சாதாரண மார்பகத்தை அடையும் ரேடியேஷன் டோஸ் குறைப்பதில் ஆராய்ச்சி செய்துள்ளார் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அதியமான். போலஸ் பொருள் மிக குறைந்த விலையில் ரூபாய் இரண்டாயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய்க்குள் மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் மருத்துவமுறையை அவர் ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ளார்.இந்த ஆராய்ச்சிக்காக ராஜஸ்தானின் பிகானேரில் நடந்த கதிரியக்க உயிரியல் மாநாட்டில் அவருக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. இந்த ஆய்வுப் பணி புகழ்பெற்ற இதழில் ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே இளம் விஞ்ஞானியாக அறிவிக்கப்பட்டுள்ள உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த அதியமானுக்கு உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் கெடிலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தின் செயலாளர் யதீஸ்வரி ஆத்மவிகாசபிரியா அம்பா தலைமையில் நடைபெற்ற விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இளம் விஞ்ஞானி அதியமான் கலந்துகொண்டு மார்பக புற்றுநோயை குணப்படுத்தும் முறை குறித்து தான் ஆய்வு செய்தவை குறித்து பேசினார்.