
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் கட்டண வசூலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் சில மாணவர்களால் பள்ளி கல்விக் கட்டணத்தை கட்டமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தனியார் பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத அனுமதி மறுத்து மாணவர்களை நாள் முழுவதும் வெயிலில் நிற்க வைத்து தண்டனை வழங்கியுள்ளது. இதனை அப்பகுதியில் இருந்தவர் விடியோ எடுத்துள்ளார். அதில், அந்த தனியார் பள்ளியில் பயிலும் மாணவி, கட்டணம் கட்டாததால் ஆசிரியர் வெயிலில் நாள் முழுவதும் நிற்கவைப்பதாக அழுதபடி கூறுகிறார். தனது தந்தை இன்று கட்டணத்தை செலுத்திவிடுவதாக தன்னிடம் கூறியுள்ளதாகவும், ஆனால் ஆசிரியர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அழுதபடி கூறியது அங்கு இருந்தவர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பகிர்ந்துள்ள நபர், கல்வியும் மருத்துவமும் என்று இலவசமாக அளிக்கும் நிலையை எப்போது நாடு அடையும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.