
சென்னை அடுத்த, பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவரின் மகள் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவி கடந்த 12ம் தேதி வழக்கம்போல் காலை கல்லூரிக்குச் சென்றார்.பின்னர் கல்லூரி முடிந்து இரவு நேரம் ஆகியும் மாணவி வீட்டிற்குத் திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து மாணவியைத் தேடிவந்தனர். இந்நிலையில் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் மாணவியைக் கடத்திச் சென்றது தெரியவந்தது. மேலும் மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.பின்னர் மாணவியுடன் ஆந்திராவில் இருப்பதை போலிஸார் கண்டுபிடித்தனர். உடனே அங்கு விரைந்த போலிஸார் வாலிபரைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நண்பர் வீட்டில் வைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.இதையடுத்து மாணவியை மீட்ட போலிஸார் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர் உட்பட இருவரையும் சென்னை அழைத்து வந்தனர். பின்னர் வாலிபர் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.