
சென்னை: தனது காரை தானே தீ வைத்து எரித்துவிட்டு மர்ம நபர்கள் கொளுத்தியதாக நாடகமாடிய பாஜக பிரமுகர் சதீஷ்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1 வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (48). பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அக்கம்பத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் ஒரு ஆணும் பெண்ணும் காரில் வந்து இறங்கி சதீஷ்குமாரின் கார் மீது பெட்ரோல் ஊற்றும் காட்சி பதிவாகி இருந்தது. அதன்பின் அந்த மர்ம நபரும் பெண்ணும் ஆட்கள் யாரும் வருகிறார்களா என்பதை சுற்றும் முற்றும் பார்க்கின்றனர்.ஆட்கள் வருவதை கண்டதும் அந்த மர்ம நபர் காரின் உள்ளே சென்று உட்கார்ந்து கொள்வதும், ஆட்கள் சென்ற பின்பு வந்து காரை தீ வைத்து கொளுத்துவதும் அந்த சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அரசியல் பகையால் கார் கொளுத்தப்பட்டதா? சமூக விரோதிகள் யாரேனும் செய்தனரா? முன்பகை காரணமாக காருக்கு தீ வைத்தார்களா? என்ற கோணத்தில் சிசிடிவி காட்சியைய் கொண்டு அவர்கள் விசாரணை நடத்தினர்.இந்த விசாரணையின்போது சிசிடிவி காட்சியை நன்கு ஆய்வு செய்த போலீசார், இறுதியில் காரை கொளுத்தியது பாஜக பிரமுகர் சதீஷ்குமார்தான் என்பதை உறுதி செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்ததில் காரை விற்றுவிட்டு மனைவி நகை வாங்கிக்கேட்டு தொல்லை கொடுத்ததால் காரை எரித்ததாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து சதீஷ்குமாரை கைது செய்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கார் எரிக்கப்பட்ட வியாழக்கிழமை சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற டாக்டர்.அம்பேத்காரின் பிறந்தநாள் விழாவில் டாக்டர்.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த போது விடுதலை சிறுத்தைகள் – பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. அந்த நிகழ்வில் பங்கேற்ற சதீஷ்குமார் இரவு காரை தீவைத்து எரித்ததால், அதற்கு வேறு அரசியல் காரணங்கள் இருக்குமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.