
சேலம்: சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடமாகும். இந்த பகுதியில் கடந்த 14-ந் தேதி இரவு மீனவர்களான கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த காரவடையான் என்கிற ராஜா (வயது 45), செட்டிப்பட்டியை சேர்ந்த ரவி (40), இளையபெருமாள் (40) ஆகியோர் பரிசல் ஒன்றில் மீன் பிடித்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டின் போது மீனவர்கள் ரவி, இளையபெருமாள் ஆகியோர் தப்பி ஓடியதாகவும், ராஜா என்ற மீனவர் மட்டும் கர்நாடக வனத்துறையின் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது துப்பாக்கிச்சூடு நடந்தது உண்மைதான் என அறிந்து கொண்டனர். ஆனால் இந்த துப்பாக்கிச்சூட்டின் போது காயம் அடைந்ததாக கூறப்படும் ராஜாவும், அவருடன் இருந்த இளையபெருமாள், ரவி ஆகியோரும் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன.? என்பது தெரியவில்லை. இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அவர்களின் வீடுகளுக்கு சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சம்பவ நடந்த பகுதி கர்நாடக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இடமாகும். இங்கு 3 பேரும் மான் வேட்டையாட சென்றபோது கர்நாடக வனத்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கர்நாடக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் அவர்களின் பரிசலில் இருந்த 2 மூட்டை மான் இறைச்சி, நாட்டுத்துப்பாக்கி ஆகியவற்றையும், பரிசலையும் கர்நாடக வனத்துறை பறிமுதல் செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் கர்நாடக போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர் அதனால் தமிழக கர்நாடக எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.