
உக்ரைனில் ரஷியத் தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழந்ததையடுத்து, அந்த மாநிலத்தில் நீட் தேர்வுக்கான எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.
உக்ரைனில் தொடர்ந்து 7-வது நாளாக ரஷியா தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாமல்போனதன் காரணத்தினாலேயே அவர் உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதுபற்றிய அவரது ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. இல்லாதவர்களை நிராகரித்து இருப்பவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி ஒதுக்கப்படுகிறது. நவீன் மரணம் நீட் தேர்வின் அடிப்படை நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்செடுத்து பணக்காரர்களுக்கு உதவும் மருத்துவக் கல்வி முறை நாட்டின் அவமானம்.
நீண்ட காலமாக புதிய கல்விக் கொள்கை குறித்து தற்பெருமை பேசும் மத்திய அரசானது, ஒருமுறையாவது மனதிலிருந்து சிந்திக்க வேண்டும்.”
இந்தப் பதிவுடன் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என்ற ஹேஷ்டேக்கையும் குமாரசாமி இணைத்துள்ளார்.