
பண்ருட்டி: கடலுார் தி.மு.க., எம்.பி.,யான ரமேஷ் தன், ‘காயத்ரி கேஷ்யூஸ்’ நிறுவனத்திற்காக, பண்ருட்டியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடன் பெற்றிருந்தார்.இந்த கடனுக்காக, பண்ருட்டி – சென்னை சாலையில் உள்ள காலி மனை உள்ளிட்ட நிலங்களை வங்கியில் அடமானம் வைத்திருந்தார்.கடன் தொகையை ரமேஷ் எம்.பி, முறையாக செலுத்தாததால், கடனை திரும்ப செலுத்துமாறு கேட்டு, வங்கி சார்பில் பல முறை ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. எனினும், கடனை அவர் திருப்பி செலுத்தவில்லை.இதையடுத்து, அவர் அடமானம் வைத்திருந்த சொத்துக்களை ஜப்தி செய்வதற்காக, வங்கி சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.மனுவை விசாரித்த கடலுார் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம், சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.இதையடுத்து, பண்ருட்டி – சென்னை சாலை எல்.என்.புரத்தில் உள்ள, ரமேஷ் எம்.பி.,யின் தந்தை வெங்கடாஜலம் பெயரில் உள்ள, 3 ஏக்கர் இடத்தை ஜப்தி செய்வதற்காக வங்கி அதிகாரிகள் நேற்று காலை வந்தனர்.இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் குவிக்கப்பட்டனர். வங்கி அதிகாரிகள் சென்றபோது, ரமேஷ் எம்.பி.,யின் ஆதரவாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன், இடத்தை கையகப்படுத்தியதற்கான அறிவிப்பு பேனரை, வங்கி அதிகாரிகள் வைத்தனர்.மேலும், ஜப்தி செய்யப்பட்ட இடத்தில் இருந்த தைல மரங்கள், குடிசை வீடு ஆகியவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு, தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டது.