
டெல்லி :2023 மார்ச்சில் நாட்டின் மொத்த கடன் ரூ.152.2 லட்சம் கோடியாக இருக்கும் என்றும் கடந்த 3 ஆண்டுகளில் புதிதாக 50 லட்சம் கோடி ரூபாய் பெற்று இருப்பதுவும் தெரியவந்துள்ளது. 2023ம் ஆண்டு மார்ச் இறுதியில் ஒன்றிய அரசின் மொத்த கடன் சுமை ரூ.152.2 லட்சம் கோடியாக இருக்கும் என்று அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட் கூறுகிறது. ஒன்றிய அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.16.6 லட்சம் கோடியாக இருக்கும். அதாவது இந்த நிதியாண்டில் ரூ.16.6 லட்சம் கோடியை ஒன்றிய அரசு கடனாக வாங்க போகிறது. 2021-2022 நிதியாண்டில் ரூ.15.9 லட்சம் கோடியையும் 2020-2021ம் நிதியாண்டில் ரூ.18.2 லட்சம் கோடியையும் ஒன்றிய அரசு கடனாக வாங்கி உள்ளது.அதாவது கொரோனாவுக்கு பிந்தைய 3 ஆண்டுகளில் மட்டும் ஒன்றிய அரசின் கடன் சுமை ரூ. 50 லட்சம் கோடி ஆக அதிகரித்துள்ளது.

மன்மோகன் சிங் ஆட்சி காலத்தின் முடிவில் அதாவது 2014ம் ஆண்டு மார்ச்சில் நாட்டின் கடன் சுமை ரூ.53.11 லட்சம் கோடியாக இருந்தது. அதுவே மோடி ஆட்சிக்கு வந்த பின் கடந்த 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட கடன் 3 மடங்கு அதிகரித்து ரூ.152.2 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 59% ஆகும். ஒன்றிய அரசு கடனுடன் மாநில அரசுகளின் கடன் தொகையையும் சேர்த்தால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 89% ஆக உயரும். ஒன்றிய அரசு தமது வரி வருவாயில் கிட்டத்தட்ட சரி பாதியை அதாவது 9.41 லட்சம் கோடியை கடனுக்கான வட்டியாகவே செலவிடும் நிலை உருவாகி உள்ளது.