
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உத்தனபள்ளியில் சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தை அறிவித்து 15வது நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். சிப்காட் அமைக்கும் விவகாரத்தில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகரில் 2 மிகப்பெரிய தொழிற்பேட்டைகள் அமைந்திருக்கின்றன்ன. இதில் உள்ள 3000த்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.அதே போல சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோனேரிப்பள்ளி, மருதாண்டப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் சுமார் 2400 ஏக்கர் நிலப்பரப்பில் விளைநிலங்கள் கைப்பற்றப்பட்டு 3வது சிப்காட் அமைக்கப்பட உள்ளன என்றாலும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.அதேபோல குருபரப்பள்ளி பகுதியில் சுமார் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் 4வது சிப்காட் அமைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டு பணிகள் ஏறக்குறைய தொடங்கியுள்ளன.இந்த நிலையில்தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3034 ஏக்கர் நிலப்பரப்பில் 5வது சிப்காட் அமைக்க சூளகிரி ஒன்றியத்தில் உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய மூன்று ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் விளைநிலங்களைக் கைப்பற்றும் பணி நடந்து வருகிறது.இதுகுறித்துப் பேசிய விவசாயி ராயப்பா, “இந்த மூன்று ஊராட்சிகளில் 30 கிராமங்கள் அடங்கியுள்ளன. 3000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விளைநிலங்களில் இந்த சிப்காட் அமைய உள்ளது. மேலும் 50க்கும் அதிகமான வீடுகளை இடிக்கவேண்டிய சூழல் உள்ளது.இப்பகுதியில் தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளும் பட்டன் ரோஸ், செண்டு மல்லி போன்ற பூ வகைகளும் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. பசுமை நிறைந்த இப்பகுதியில் சிப்காட் அமைத்து விவசாயத்தை அழிக்க வேண்டாம், வேறு பகுதிகளில் சிப்காட் அமைத்துக்கொள்ள வேண்டுமென்பதே இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை,” என்றார்.அந்தப் பகுதியைச் சேர்ந்த ரத்தினம்மாவோ, “விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதால் இந்தப் பகுதியில் வசித்து வரும் பத்தாயிரம் குடும்பங்களின் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படும். அதனால் அரசு இந்தத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற கோரிக்கையோடு நாங்கள் கடந்த15 நாட்களாக உத்தனப்பள்ளி வருவாய் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம்.அரசு திட்டத்தை அறித்தவுடன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதலே நாங்கள் போராடத் தொடங்கிவிட்டோம். ஆனால் தீர்வு இல்லை. அரசு தலையிட்டு விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்,” என்றார்.இந்நிலையில் 20ஆம் தேதியன்று சிலர் காவல்நிலையம் எதிரே உள்ள 2 செல்போன் டவர்கள் மீது ஏறி கைகளில் கருப்புக்கொடியைப் பிடித்துக்கொண்டு சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாலை 6 மணி வரை போராட்டகாரர்கள் கலைந்து செல்லவில்லை. என்பதால் ஓசூர் துணை ஆட்சியர் சரண்யா விவசாயிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், “உங்களுடைய கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முறையாக எடுத்துச் சென்றுள்ளோம். இதற்கான விளக்க அறிக்கையை 10 நாட்களில் உங்களுக்கு முறையாக வழங்க உள்ளோம். ஆகவே போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லுங்கள்,” என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் விவசாயிகள் தரப்போ, எங்களுக்கு மாவட்ட ஆட்சியர் முறையாக அறிக்கை தயார் செய்து அதில் கையொப்பமிட்டு எங்களுடைய பிரச்னையை தீர்க்க வேண்டும், அப்போத தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்று போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.