ஐ.நா. சபையில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவு : இந்தியா மீண்டும் புறக்கணிப்பு.!

நியூயார்க் : உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என்று ஐ.நா.பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா.சபையில் அவசர கூட்டம் நடைபெற்றது.

இந்த சிறப்பு கூட்டத்தில் உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ரஷ்யாவிற்கு உக்ரைனுக்கும் இடையேயான மோதலை அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை மூலம் உடனே தீர்வுகாண வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா.சபையில் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகளும் எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன. இதையடுத்து பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

முன்னதாக தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஐ.நா. வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டு மாணவர்கள் உட்பட இந்தியர்கள் வெளியேற பாதுகாப்பான மற்றும் தடையற்ற பாதையை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இரு நாடுகள் இடையேயான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியில் மட்டுமே தீர்க்க முடியும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். உக்ரைன், ரஷ்யா இடையில் உடனடி போர் நிறுத்தத்திற்கான சர்வதேச நாடுகளின் அழைப்பை இந்தியா ஆதரிப்பதாகவும் திருமூர்த்தி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *