ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா அணிகள் மோதல்.!

புதுடெல்லி:

15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில் போட்டி அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

65 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. கடைசி லீக் ஆட்டம் மே 22ம் தேதி வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

வான்கடே மைதானம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் ஆகிய மைதானங்களில் தலா 20 லீக் ஆட்டங்களும், மும்பை பிரபோன் மைதானம் மற்றும் புனே எம்சிஏ சர்வதேச ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகளும் நடக்கின்றன. இரண்டு போட்டிகள் நடைபெறும் நாட்களில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கும், இரண்டாவது போட்டி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும்.

லீக் ஆட்டங்களுக்கான அட்டவணை மட்டும் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிளேஆப் போட்டிகள் மற்றும் மே 29ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதும் அணிகள் மற்றும் மைதானங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *