எஸ் பி அலுவலகத்தில் பரபரப்பு புகார் சாராயம் விற்க செல்லும் போலீஸ்..!

மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி தாலுகா கிளியனூர் மேலத்தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது மகன்களுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து பெரம்பூர் காவல் நிலைய போலீஸார் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அந்த மனுவில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான நான் காரைக்கால் பகுதிக்குச் சென்று மதுஅருந்துவிட்டு விலைகுறைவு என்பதால் மதுபாட்டில்கள் வாங்கிவருவேன். அதனைத் தெரிந்தவர்கள் கேட்டால் கொடுத்துவிட்டு பணம் வாங்கிகொள்வேன். அப்படியிருந்தபோது மதுகடத்தியதாக பெரம்பூர் போலீஸார் என்னைக் கைது செய்தனர்.ஆனால் என்னிடம் “தொடர்ந்து சாராயம் விற்பனை செய்” என்று போலீஸார் கூறினர். அதன்படி சாராய விற்பனைச் செய்து வாரந்தோறும் போலீசாருக்கு ரூ.7 ஆயிரம் மாமுல் கொடுத்து வந்தேன். எனது மனைவி இறந்தநிலையில் மகன்களுக்கு திருமணமாகி, மருமகள்கள் வந்துவிட்டதால் சாராய விற்பனையை நிறுத்திவிட்டேன்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இனி சாராய விற்பனை செய்யமாட்டேன். திருந்தி வாழவிரும்புகிறேன் என்று எழுதியும் கொடுத்து விட்டேன்.ஆனால் போலீஸார் சாராயம் விற்பனை செய்யவில்லை என்றாலும் எங்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டுமென்று கூறி மிரட்டி என்மீதும், எனது பிள்ளைகள் மீது பொய்வழக்கு போட்டு மிரட்டுகின்றனர். சென்னையில் வேலைபார்த்து வந்த எனது மகன் தீனாஅரசன் ஊருக்கு வந்தபோது அவர் மீது சாராயம் விற்றதாக பொய்வழக்கு போட்டு என்னிடம் பணம்கேட்டு மிரட்டுகின்றனர். எங்கிருந்தோ சாராய பாக்கெட்டுக்களை கொண்டுவந்து என்வீட்டு முன்பு போட்டு உடைத்து போலீஸார் வீடியோ எடுத்துச் செல்கின்றனர். இது குறித்து உரிய விசாரணை செய்து திருந்திவாழ நினைக்கும் என்னையும், எனது குடும்பத்தாரையும் நிம்மதியாக வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று” அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அதிகாரி கூறுகையில் “இது முற்றிலும் தவறான புகார் ஆகும். வழக்கறிஞர் ஒருவருக்கு அந்தக் காவல் நிலையத்தின்மீது தனிப்பட்ட முறையில் வருத்தமிருக்கிறது. அவர் வஞ்சம் தீர்க்கவே இப்படியோர் பொய் புகாரை கொடுக்க வைத்துள்ளார்” என்றார். துறை ரீதியிலான விசாரணையில் முடிவில்தான் உண்மை தெரியும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *