எம்எல்ஏவின் பெட்ரோல் பங்க் அகற்றம்: ‘புல்டோசர் பாபா’வாக மாறிய யோகி ஆதித்யநாத்.! உத்தரபிரதேசத்தில் பரபரப்பு.!

லக்னோ: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) எம்எல்ஏ ஷாஜில் இஸ்லாம் அன்சாரி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கை மாநில அரசு அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) எம்எல்ஏ ஷாஜில் இஸ்லாம் அன்சாரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் பேசுகையில், ‘சட்டசபையில் எங்களது கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. இனிமேல் எதிர்கட்சியை ஒடுக்க நினைத்தால் சமாஜ்வாதி கட்சியின் துப்பாக்கியில் இருந்து புகை வராது.தோட்டாக்கள் தான் வரும்’ என்றார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் பரேலி – டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் பர்சகேடாவில் எம்எல்ஏ ஷாஜில் இஸ்லாம் அன்சாரிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டது. அந்த பெட்ரோல் பங்கானது, விதிமுறை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக எழுந்த புகாரால் கடந்த 2 வருடத்திற்கு முன்பே மாநில அரசால் நடவடிக்கை தொடங்கப்பட்டது.நீதிமன்ற உத்தரவுகளை தொடர்ந்து, தற்போது எம்எல்ஏவுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கை ஜேசிபி இயந்திரம் (புல்டோசர்) மூலம் அதிகாரிகள் அகற்றினர். இந்த நடவடிக்கையால் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அம்மாநில பாஜகவினர் ‘புல்டோசர் பாபா’ என்று வர்ணித்து பேசி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, குற்றவாளிகளின் சட்டவிரோத சொத்துக்களை புல்டோசர்கள் மூலம் அகற்றப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *