என்ஐஏ அதிகாரி போல் நடித்து ரூ. 20 லட்சம் ரூபாய் மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது.!

சென்னை: சென்னை முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஜமால். இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பர்மா பஜார் பகுதியில் செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த டிச. 13ஆம் தேதி ஜமால் வீட்டிற்கு கும்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கும்பல் தங்களை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் என கூறிக்கொண்டு, கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சோதனை நடத்த வந்ததாக தெரிவித்துள்ளது. அவர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்துள்ளது. பின்னர் பர்மா பஜாரில் உள்ள ஜமாலின் கடையிலும் இந்த கும்பல் சோதனை நடத்தி உள்ளது. ஜமாலின் வீடு மற்றும் கடையில் இருந்து ஏறத்தாழ 20 லட்சம் ரூபாய்க்கு மேல் எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஜமால் விசாரித்துள்ளார். அப்போதுதான், வீட்டில் சோதனை செய்தது என்ஐஏ அதிகாரிகள் இல்லை என்பது ஜமாலுக்கு தெரியவந்துள்ளது. தான் மோசடி செய்யப்பட்டது குறித்து முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜமால் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய அடையாளம் தெரியாத கும்பலை துறைமுகம் உதவி ஆணையர் வீர குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.இந்த் நிலையில் இந்த வழக்கில் ராயபுரத்தைச் சேர்ந்தவரும், பாஜக நிர்வாகியுமான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பணியாளரான புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார், பல்லவன் சாலையைச் சேர்ந்த சப்பரம் தூக்கி கார்த்திக், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ் மற்றும் ரவி ஆகிய 6 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *