
எச்ஐவியில் இருந்து இளம்பெண் முற்றிலும் குணமடைந்துள்ள சம்பவம் மருத்துவ உலகில் பெரும் மைல்கல்லாக கருதப்படுகிறது.எய்ட்ஸ் எனப்படும் எச்ஐவி நோய் தாக்கிய பெண்ணுக்கு ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டதன் பயனாக, அவர் முற்றிலும் குணமடைந்திருக்கிறார்.சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆராய்ச்சி அறிக்கையில், ஆண்டிரெட்ரோவைரல் சிகிச்சையை நிறுத்தியபிறகும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில், எச்ஐவி வைரஸ் இருப்பதற்கான அளவீடுகள் கடந்த 14 மாதங்களில் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டெம்செல்கள் என்பவை, நமது உடலிலிருக்கும் சிறப்பு செல்களைக் கொண்டு உருவாகும் தனித்திறன் கொண்டவை. ஸ்டெம்செல் சிகிச்சை அளிக்கப்பட்டு, எச்ஐவியிலிருந்து குணமடைந்த மூன்றாவது நபர் இவர் என்று தேசிய சுகாதார மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே, பெர்லின் மற்றும் லண்டனைச் சேர்ந்த இரண்டு நோயாளிகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு எச்ஐவியிலிருந்து மீண்டனர்.இந்நிலையில் உலகிலேயே எச்ஐவியிலிருந்து குணமடைந்த மூன்றாவது நபர் இவர் என்பதும், முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.