`எங்கள் நாட்டில் அமைதியாகவே வாழ்கிறோம்’ – பாராட்டிய அல்கொய்தா தலைவருக்கு கர்நாடக மாணவியின் தந்தை பதில்.!

இந்தியாவில் பெரும் பேசுபொருளாக இருந்த ஹிஜாப் விவகாரம் தொடர்பாக அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் அல்-ஜவாஹிரி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், “இந்து‌ சமுதாயத்தில் முஸ்லிம்கள் ஏமாற்றப்படுவதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும். தொடக்கத்தில் இது முஸ்லிம்களை ஒடுக்கும் கருவியாக இருந்ததில்லை. ஆனால் எப்போது ஹிஜாபை தடை செய்ததோ, அப்போதே முஸ்லிம்களை ஒடுக்கும் ஒரு உண்மைக் கருவியாக இருப்பது அம்பலமாகியுள்ளது” என பேசி இருந்தார். அரபி மொழியில் இருந்த காணொளி ஆங்கில சப்டைட்டிலுடன் இருந்தது. மேலும் அந்த காணொளியில் ஹிஜாப் சர்ச்சையின் போது கர்நாடகாவில் முஸ்லிம் மாணவியை சூழ்ந்து பல இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கோஷமிட்டதைப் பொருட்படுத்தாது, ஹிஜாப் அணிந்து கல்லூரிக்குள் சென்றதைக் குறிப்பிட்டு பாராட்டி இருந்தார். அந்த மாணவிக்காக ஒரு கவிதையை வாசித்து “நம் வீரத்தங்கைக்கு சமர்ப்பிக்கிறேன்” எனக்கூறி இருந்தார்.தற்போது அந்த மாணவியின் தந்தை அந்த வீடியோ குறித்து பேசி உள்ளார். அவர், “எங்களுக்கு அந்த காணொளி குறித்து எதுவும் தெரியாது. அதில் பேசியவர் யாரென்று கூட தெரியாது. இன்று தான் முதல் முறையாக அவரைப் பார்க்கிறேன்.அந்த காணொளியில் அரபி மொழியில் ஏதேதோ கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் இங்கு அமைதியுடனும் அன்புடனும் வாழ்கிறோம். யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், இந்த காணொளியால் எங்களுக்கு தேவையற்ற பிரச்னை தான் உண்டாகும். நாங்கள் எங்கள் நாட்டில் அமைதியாகவே வாழ்கிறோம். யாரும் எங்களைப் பற்றி எதுவும் பேசத் தேவையில்லை. எங்களுக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவருடைய இந்த பேச்சு வேற்றுமையையே அதிகரிக்கும்” எனக் கூறியுள்ளார்.மேலும் தன் மகள் குறித்து பேசிய அவர், “என் மகள் இன்னும் ஒரு‌ மாணவிதான். அவள் மேலும் படிக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த காணொளி குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் அராகா ஞானேந்திரா (Aaraga jnanendhra), “இந்த விவகாரத்தில் பல அறியாத கைகளின் பங்கு இருப்பதை உணர முடிகிறது. உள்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வர். இந்த தொடர்புகள் குறித்து விசாரணையும் நடத்தப்படும்” எனக்கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *