“எங்கள் உணவு, உடை, மொழி குறித்துப் பேச நீங்கள் யார்?” – அமித்ஷாவுக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி!

கடந்த வாரம் டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை வகித்துப் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘நாட்டின் ஒருமைப்பாட்டை அதிகரிக்க அலுவல் மொழியின் முக்கியத்துவத்தையும், பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. பல்வேறு மொழிகளில் உரையாடும் மாநில மக்கள், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது அவர்கள் பேசும் இணைப்பு மொழி இந்தி மொழியாக இருக்க வேண்டும். இந்தி உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்துக்கு மாற்றாக. பிற உள்ளூர் மொழிகளில் இருக்கும் வார்த்தைகள் இந்தி மொழியில் ஏற்றுக்கொள்ளும் வகையில் நெகிழ்வாக மாற்ற வேண்டும்’ என்றும் ‘இந்தி கற்பித்தல் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும்’ என்றும் பேசியிருந்தார். மேலும் உள்துறை அமைச்சகத்தின் நிகழ்ச்சி நிரல்கள் பெரும்பாலும் இந்தி மொழியில் மட்டுமே இருப்பதாகக் கூறியியிருந்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் இந்த பேச்சு நாடுமுழுவதும் பேசுபொருளானது. பலரும் இது பற்றி கருத்துத் தெரிவித்து வந்தனர். பலரும் இந்தக் கருத்தை எதிர்த்து தங்களுடைய கருத்தைப் பதிவு செய்துவந்தனர். தற்போது கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, மராட்டி போன்ற மொழி படங்களில் நடித்து வரும் பிரபல குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜ் இது குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.இது குறித்து விரிவாகப் பேசிய பிரகாஷ் ராஜ், “ஹிந்தி கற்றுக்கொள்வதில் பிரச்னை இல்லை. அதை யார் சொல்கிறார்கள் என்பதும், `ஒரே மொழி ஒரே தேசம் ஒரே மதம்’ என்ற அவர்களின் அஜெண்டா தான் இங்கு பிரச்னை. அதனால்தான் அதை எதிர்ப்பதாக கூறினார். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மொழியும் இங்கு தனித்துவமானது அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தாய் மொழி வாழும். அதிகமான மக்கள் ஹிந்தி பேசுவதால் இந்தியா முழுவதும் அதை பேசவேண்டியக் கட்டாயமில்லை. அப்படியென்றால் ஏன் எண்ணிக்கையில் அதிகமான பறவைகள் தேச பறவையாக இல்லாமல் எண்ணிக்கையில் குறைவாக உள்ள மயில் தேசிய பறவையாக உள்ளது. நாம் இன்று உலகளாவிய மனிதனாக (global citizen) இருக்கிறோம். மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளது எனவே எந்த மொழி தேவைப்படுகிறதோ அதைக் கற்றுக் கொள்வோம்” என்று கூறினார்.மேலும், தனக்கு 7 மொழிகள் தெரியும் என்று கூறிய அவர் தேவை ஏற்பட்டால் கற்றுக்கொள்வோம், கட்டாயமாக திணிக்க வேண்டாம். ‘என் தாய் மொழி கன்னடம். நான் அதில் பெருமைப்படுகிறேன். அதுதான் எனக்கு பிறமொழிகளை பேசக் கற்றுக் கொடுத்தது. என் கலாசாரத்தை எப்படி முன்வைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தது’ என்று கூறிய அவர் ‘நான் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும், எந்த மதத்தை சார்ந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? முக்கிய பிரச்னைகள் நாட்டில் இருக்கும் போது அதை பற்றி பேசாமல் ஒரே சீருடை, ஒரே கல்வி, ஹிஜாப் குறித்த சட்டம் என பேசுகிறீர்கள்’ என்று கூறியுள்ளார் பிரகாஷ் ராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *