எங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்- வேலூர் மாணவி செல்போனில் உருக்கம்.!

வேலூர்:வேலூர் தோட்டப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர்- பொற்செல்வி தம்பதியின் மூத்த மகள் தீபா (வயது 21). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள போல்டாவா என்ற பகுதியில் உள்ள மாநில பல்கலைக்கழகத்தில் 4-ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். கடந்த ஆகஸ்டு மாதம் உக்ரைன் சென்றார். தற்போது போர் நடப்பதால் அவர் அங்கு சிக்கியுள்ளார். அவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-நான் உக்ரைன் நாட்டில் உள்ள போல்டாவா மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன். இங்கு இந்தியாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.தமிழகத்தில் இருந்து மட்டும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கின்றனர். நாங்கள் குண்டு வெடிப்பு சத்தங்களை அடிக்கடி கேட்கிறோம். வானில் பல விமானங்கள் பறக்கிறது. முதலில் போர் நடப்பது தெரியவில்லை. பின்னர் தான் தெரிந்தது. எங்கள் பகுதி தற்போது பாதுகாப்பாக உள்ளது. ஆனால் பிற பகுதிகளில் குண்டுகள் போடப்படுகிறது. எங்கள் பகுதியிலும் குண்டுகள் போட வாய்ப்புள்ளதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர். உள்ளூர்வாசிகள் அனைவரும் உடைமைகளுடன் வேறு இடத்துக்கு செல்கின்றனர். நான் எங்கு செல்வது என்று தெரியவில்லை.எங்கள் பகுதியில் மட்டும் தற்போது தொலைதொடர்பு சாதனங்கள் செயல்பாட்டில் உள்ளது. எங்கள் நகருக்கு அருகில் உள்ள சுமி, டினிப்ரோ, கார்கிவ் ஆகிய பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. போல்டாவாவையும் தாக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. நான் இந்திய அரசுக்கு இ-மெயில் அனுப்பி உள்ளேன். அவர்களிடத்தில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று தகவல் வந்துள்ளது. ஆனால் மீட்பு குறித்து அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. அருகில் உள்ள விமான நிலையங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது. சில விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.கடைகளில் பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கி இருப்பு வைக்கின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பொருட்களும் காலியாகிவிட்டது. நாங்கள் அனைவரும் மிகவும் அச்சத்தில் உறைந்துள்ளோம். எங்களை மீட்க இந்திய அரசும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எனது மகள் அங்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளார். அவரை மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 26-ந் தேதி அவர் தமிழகம் வர இருந்தார். இந்த நிலையில் அவர் அங்கு சிக்கிக்கொண்டார். அவரது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அவளை போன்று பல இந்தியர்களும் அங்கு மாட்டிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *