எங்களது போராட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது அல்ல என மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ட்விட்டரில் வீடியோ வெளியீடு.!

தங்களது போராட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது அல்ல என மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் மற்றும் அவரது கணவர் சத்யவர்த் கதியன் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் விடியோ ஒன்றினை அவர்கள் பகிர்ந்துள்ளனர்:-

அந்த விடியோவில் மல்யுத்த வீரரும், மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்கின் கணவருமான சத்யவர்த் கதியன் பேசியதாவது: எங்களது போராட்டம் தொடர்பாக பொய்யான தகவல் (வதந்திகள்) பரப்பப்படுகிறது. நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எங்களது இந்த போராட்டம் அரசியல் ஆதாயம் சார்ந்தது அல்ல. நாங்கள் ஜனவரியில் ஜந்தர் மந்தருக்கு வந்தோம். போராட்டம் நடத்துவதற்கு பாஜகவைச் சேர்ந்த தலைவர்களால் இந்த போராட்டத்துக்கு காவல் துறையினரால் அனுமதி வாங்கப்பட்டது. போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக் கோரி முன்னாள் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் மற்றும் தீரத் ராணா அவர்களால் அனுமதி கடிதம் எழுதப்பட்டது. இவர்கள் இருவரும் பாஜகவுடன் தொடர்புடையவர்கள். இந்த போராட்டம் காங்கிரஸ் ஆதரவு கொடுத்து நடத்தப்படும் போராட்டம் இல்லை.

கடந்த 10-12 ஆண்டுகளாக மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் கொடுக்கப்பட்டு வருவது 90 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்களுக்குத் தெரியும். சிலர் மட்டும் இதனை எதிர்த்து குரல் கொடுக்க முன்வந்தனர். ஆனால், மல்யுத்த வீரர்கள் அனைவரும் ஒற்றுமையாக இதனை எதிர்த்து குரல் கொடுக்க முன்வரவில்லை.

எங்களது இந்த போராட்டம் மல்யுத்த சம்மேளனத் தலைவருக்கு எதிரானதே தவிர, அரசுக்கு எதிரானது இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக கடந்த மே 28 ஆம் தேதி காவல் துறை நடந்து கொண்ட விதம் கடுமையாக இருந்தது. காவல் துறை எங்களை கட்டுப்படுத்தி பேருந்துக்குள் அடைத்தனர்.நாங்கள் நாட்டுக்காக பல பதக்கங்களை வென்று கொடுத்துள்ளோம். எங்களது கண்ணியம் காலடியில் மிதித்து நசுக்கப்படுகிறது. எங்களது மன வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

எங்களுக்கு இந்த விஷயத்தில் சதிச் செயல் உள்ளதா என்பதை யோசிக்கும் அளவுக்கு மன அமைதி என்பது இல்லை. நாங்கள் மிகுந்த மன வேதனையில் உள்ளோம். வாழ்நாள் முழுவதும் மல்யுத்தம் குறித்து மட்டுமே சிந்தித்த எங்களுக்கு இதுபோன்ற சூழல்களை கையாளத் தெரியவில்லை. நாங்கள் நிறைய பேரை சந்திக்கிறோம் அவர்களில் யாரை நம்புவது என எங்களுக்குத் தெரியவில்லை. உள்துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்துவிடுங்கள். எங்களுடன் துணை நின்று ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *