
புதுடில்லி: இந்திய ஊடகங்களில் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் 90% உயர் சாதியினர் என்று ஆக்ஸ்பாம் இந்திய – நியூஸ்லாண்டரி அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள 43 அச்சு ஊடகம், காட்சி ஊடகம் மற்றும் இணையதள ஊடகங்களில் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் உயர் சாதியினர் என்றும், ஒருவர் கூட பட்டியல் இனத்தவரோ அல்லது பழங்குடியினரோ இல்லை என்றும் ஆக்ஸ்பாம் இந்திய – நியூஸ்லாண்டரி தெரிந்தது. தெற்காசியாவின் மிகப்பெரிய செய்தி ஊடக மன்றத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, இந்தி மற்றும் ஆங்கில செய்தித்தாள்களில், 5 கட்டுரைகளில் 3 கட்டுரைகள் உயர் சாதி ஆசிரியர்களால் எழுதப்பட்டதாகவும், 5 கட்டுரைகளில் 1 கட்டுரை மட்டுமே எஸ்.சி, எஸ்.டி அல்லது ஒ.பி.சி பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்களால் எழுதப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மொத்தம் 40 இந்தி மற்றும் 47 ஆங்கில காட்சி ஊடகங்களை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, விவாத நிகழ்ச்சிகளின் நெறியாளர்கள், நான்கு பேரில் மூன்று பேர் உயர் சாதியினர். அவர்களில் ஒருவர் கூட தலித்தோ, ஆதிவாசியோ அல்லது ஓபிசி பிரிவைச் சேர்ந்தவரோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.