உ.பி-யில் நாளை 6-ம் கட்ட தேர்தல்:பகுஜன் சமாஜ் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.57 தொகுதிகளில் வாக்குப்பதிவு.!

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டபேரவைக்கான 6 ஆம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. பகுஜன் சமாஜ் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச சட்டபேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி, பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பலத்த போட்டியில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. பெரிய கூட்டணிகள் இல்லாமல், பெரிய கட்சிகள் எல்லாம் சிறிய கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன. கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் தற்போது வரை 5 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து உள்ளது.

நாளை 6 ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிய இந்த தேர்தல், தற்போது கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. பாஜக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி பெற்று உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அதற்கு அடுத்த தேர்தலில் பாஜகவிடம் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தற்போது அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆட்சியில் அமர வியூகம் வகுத்து, அதற்கு தகுந்தாற்போல் செயல்பட்டு வருகிறது.

பல்ராம்பூர், சித்தார்த்நகர், கோரக்பூர், அம்பேத்கர்நகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு தலித் மற்றும் முஸ்லிம் வாக்குகள் அதிகம் என்பதால், இந்த இடங்களில் பாஜகவுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் நேரடி போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலில் முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதி மற்றும் 11 தனி தொகுதிகள் என 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மொத்தம் 676 வேட்பாளர்கள் நாளைய தேர்தல் களத்தில் உள்ள நிலையில் 2.14 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *