உ‌.பி-யில் ஆட்சி அமைப்பது யார்.?மல்லுகட்டும் பாஜக.. வலு கொடுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி.!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் மிக முக்கியமான பகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பகுஜன் சமாஜ் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகள் என்பதால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம் மிகப்பெரிய மாநிலம். உங்கு 403 சட்டசபைத் தொகுதிகள் இருக்கின்றது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சி, மத்தியில் ஆட்சியில் அமரும் என்பது நம்பிக்கை.

அதனால் உத்தரப்பிரதேசத்தில் உள்ள சமாஜ்வாதி, பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் பலத்த போட்டியில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. பெரிய கூட்டணிகள் இல்லாமல், பெரிய கட்சிகள் எல்லாம் சிறிய கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்து வருகின்றன.

உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்துவருகிறது. இதில் ஏற்கெனவே 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை 6 வது கட்ட தேர்தல் நடக்கிறது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தொடங்கிய இந்த தேர்தல், தற்போது மிக முக்கியமாக கட்டத்தை எட்டியுள்ளது. கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

பாஜக‌

பாஜக தற்போது ஆட்சியில் இருக்கிறது. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. முதன்முறையாக சட்டசபைத் தேர்தலில் நேரடியாக போட்டியிடுகிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத். பிரதமர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த தேர்தலைப் போல அல்லாமல், இந்த தேர்தல் பாஜகவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமாக இருக்கிறது. விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது…

சமாஜ்வாதி

2012 தேர்தலில் சமாஜ்வாதி வெற்றி பெற்று உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அதற்கு அடுத்த தேர்தலில் பாஜகவிடம் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. தற்போது அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆட்சியில் அமர வியூகம் வகுத்து அதற்கு தகுந்தாற்போல் செயல்பட்டு வருகிறது. மேற்கு மற்றும் மத்திய மாநிலத்தில் சமாஜ்வாதிக்கு ஆதரவு இருக்கிறது. இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி என்றாலும் நேரடியாக பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் தான் போட்டி நிலவுகிறது.

பகுஜன் சமாஜ்

இன்னும் இரண்டு கட்ட தேர்தல்கள் கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற இருக்கிறது. இங்கு பாஜகவை விட பகுஜன் சமாஜ் கட்சிதான் வலுவாக இருக்கிறது. கடந்த தேர்தல்களில் வெற்றி எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இந்த மாவட்டங்களில் பகுஜன் சமாஜ் எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறது. அதாவது சமாஜ்வாதி கட்சியை விடவும் அதிக வெற்றிகளை இந்தப்பகுதியில் பெற்றிருக்கிறது பகுஜன் சமாஜ்.

கிழக்கு உபி

பல்ராம்பூர், சித்தார்த்நகர், கோரக்பூர், அம்பேத்கர்நகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. இங்கு தலித் மற்றும் முஸ்லிம் வாக்குகள் அதிகம். இந்த இடங்களில் பாஜகவுக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. தலித் ஓட்டுகள் அதிகமிருக்கும் 19 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கடந்த தேர்தலில் 5 தொகுதியிலும், அதற்கு முந்தைய தேர்தலி 8 தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

அமித்ஷா

இந்த தொகுதிகளில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் ஓட்டுகள், அதிருப்தி காரணமாக வேறு கட்சிக்குப் போகாமல் இருக்க பகுஜன் சமாஜ் கட்சியை பாராட்டி பேசி இருந்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி இன்னும் உயிர்ப்போடு இருப்பதாகவும், அவர்கள் வலுவாக இருப்பதாகவும் பேசி இருந்தார். இதையடுத்து பாஜகவின் பி டீம் பகுஜன் சமாஜ் கட்சி என்ற பேச்சு எழுந்தது. ஆனால் அப்படி எதுவும் இல்லை என பேட்டி கொடுத்தார் மாயாவதி.

யோகி ஆதித்யநாத்

இந்த தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரது சொந்த தொகுதியான கோரக்பூரில் போட்டியிடுகிறார். ‘மோடி மேஜிக்..யோகி மேஜிக்’ என்று வளர்ச்சியை முன்னிறுத்தி இங்கு பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள் பாஜகவினர். யோகி பாஜகவின் முகமாக மாறியதால், இந்த பகுதிகளில், கடந்த தேர்தலை விடவும் அதிக தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்ற நம்ம்பிக்கையில் இருக்கிறது. டபுள் இஞ்சின் ஆட்சி என்று தங்களைத் தாங்களே சொல்லி பிரசாரம் செய்கிறார்கள். பாஜகவில் இருந்து ஓபிசி தலைவர்கள் சமாஜ்வாதிக்கு சென்றுவிட்டதால், ஓபிசி வாக்குகளைப் பெறும் முயற்சியில்ல் இறங்கியுள்ளார்கள் பாஜகவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *