
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கான 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 10 முதல் மாா்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 5 கட்டங்களாக 292 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 6-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றது.
இந்தக் கட்டத்தில் அம்பேத்கா் நகா், பல்ராம்பூா், குஷிநகா் உள்பட 10 மாவட்டங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூா், மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் குமாா் லல்லு போட்டியிடும் தும்குஹி ராஜ், பாஜக அமைச்சா் பதவியிலிருந்து விலகி சமாஜவாதியில் இணைந்த சுவாமி பிரசாத் மெளா்யா போட்டியிடும் ஃபாஸில்நகா் தொகுதிகளும் அடங்கும் மேலும் இந்த தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி பெரும்பான்மையாக இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தலில் யோகி ஆதித்யநாத் முதல்முறையாகப் போட்டியிடுகிறாா்.கோரக்பூா் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் காலை 7 மணிக்கே வாக்களித்துள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலின்போது இந்த 57 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளில் வென்றிருந்தது.
மாா்ச் 7-ஆம் தேதி இறுதிகட்டத் தோ்தல் நடைபெறுகிறது.