
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொழிற்பேட்டையில் புதிய காலணிகள் உற்பத்தி ஆலை- முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தைவான் நாட்டைச் சேர்ந்த பவுசென் கார்ப்பரேஷன் காலணிகள் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. இந்நிறுவனம், உலகப் புகழ்பெற்ற காலணி நிறுவனங்களுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக விளங்குகிறது. பவுசென் குழுமத்தைச் சேர்ந்த ஹை கிளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், காலணி உற்பத்திக்காக அடுத்த 12 ஆண்டுகளில் ரூ.2,302 கோடி முதலீடு மற்றும் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சிப்காட் உளுந்தூர்பேட்டை தொழிற் பூங்காவில் காலணிகள் உற்பத்திக்கான ஆலை அமைக்கவுள்ளது.
இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்றைய தினம் தமிழ்நாடு அரசிற்கும் ஹை கிளோரி புட்வேர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வெளியிடப்பட்டதன் தொடர்ச்சியாக, இத்திட்டம் ஈர்க்கப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்கது. மேலும், தொழில் வளர்ச்சி மாநிலம் முழுவதும் பரவலாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகளை ஈர்த்திட அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு பலன் அளித்திடும் வகையிலும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.