
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உளுந்தூர்பேட்டை மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடி மையங்களில் பாஸ்ட் ட்ராக் முறை அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுங்கச்சாவடி ஒப்பந்தம் 2026 வரை உள்ள நிலையில் திடீரென சுங்கச்சாவடி நிறுவனங்கள் இது போன்ற ஆள் குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் இந்த நிலையில் தங்களின் ஒப்பந்த காலம் முடியும் முன்பே உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி நிறுவனத்தின் 26 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து சக ஊழியர்களும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல் உதவி கண்காணிப்பாளர் மகேஷ், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் செங்குறிச்சி சுங்கச்சாவடிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியும் மாலை வரை நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் 30 பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் ஊழியர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் அவர்கள் செய்தியர் சந்திப்பில் மாநில தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஆணைக்கிணங்க ஊழியர்களின் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் பகுஜன் தொழிற்சங்கம் முழு ஆதரவு அளிக்கும் என்றும் அப்படி நிர்வாகம் தொழிலாளர்கள் நீக்கியதை திரும்ப பெறவில்லை என்றால் ஒவ்வொருவருக்கும் அவர்களின் மாத ஊதியத்தில் 75% ஊதியத்தை நான்கு ஆண்டுகளுக்கான தொகையை நிர்வாகம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.