உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி பெண் ஊழியர் உள்பட 3 பேர் கைது.!

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு. மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இளந்தமிழன் (வயது 64). ஓய்வுபெற்ற என்.எல்.சி. ஊழியர். இவரது மகன் இமயவர்மன் (34).

இவர்கள் சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பழக்கம் உள்ளது, அதன் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வந்துள்ளனர். இதற்காக பலரிடம் பணம் வாங்கி வந்ததாகவும் தெரிகிறது.

அந்த வகையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் (43) என்பவர் தனக்கு தெரிந்த 6 பேருக்கு அரசு வேலை வாங்கி தரக்கோரி ரூ.12½ லட்சத்தை இளந்தமிழன் தரப்பினரிடம் கொடுத்துள்ளார்.

சென்னையை சேர்ந்த ஊழியர்கள்

பணத்தை பெற்றுக்கொண்ட இளந்தமிழன், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் பகுதியை சேர்ந்த அருண்குமார் (42), அவரது மனைவி அஜந்தா(40) ஆகியோரிடம் அந்த பணத்தை கொடுத்தார்.

இதில் அருண்குமார் சென்னை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் அலுவலக உதவியாளராகவும், அஜந்தா சென்னை எழிலகத்தில் உள்ள உள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இளந்தமிழன் தரப்பினர் வேலை வாய்ப்பு எதையும் பெற்றுக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். கொடுத்த பணத்தை ராமானுஜம் கேட்டும் திரும்ப கொடுக்கவில்லை. இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டு இருப்பது அவருக்கு தெரியவந்தது. இதேபோன்று அவர்கள் பலரிடம் மோசடி செய்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

இது குறித்து ராமானுஜம், கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ராமானுஜம் உள்பட பலரிடம் பணத்தை பெற்று ரூ.1 கோடியே 15 லட்சம் வரைக்கும் இளந்தமிழன் உள்பட 4 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அஜந்தா, இளந்தமிழன் மற்றும் இமயவர்மன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அஜந்தாவின் கணவர் அருண்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *