
ஜப்பான்: உலக அளவில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியவர்களில் சுமார் 28% சதவிகிதம் பேர் ஜப்பானில் உள்ளதாக உலக வங்கியின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் வசித்து வந்த பாட்டி கேன் தனகா (Kane Tanaka) உலகின் மிகவும் வயதானவர் என்ற சாதனையை 2019 ஆண்டு படைத்தவர். தற்போது தன்னுடைய 119 வயதில் இயற்கை எய்தினார். நர்சிங் ஹோமில் வசித்து வந்த இவர், சமீப காலம் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

திடீரென ஏற்பட்ட இவரது மரணம் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளதாகவும். தனகா ஜனவரி 2, 1903-ல் ஜப்பானின் தென்மேற்கு ஃபுகுவோகா பகுதியில் பிறந்தார். தனது இளமை பருவத்தில், நூடுல்ஸ் கடை மற்றும் அரிசி கேக் கடை உட்பட பல்வேறு வணிகங்களை நடத்தி வந்தார். 1922-ல் ஹிடியோவை மணந்தார். நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த இந்தத் தம்பதி, ஐந்தாவதாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்டனர். இந்த வயதிலும், தினசரி காலை 6:00 மணிக்கே எழுந்து, மதியம் கணிதம் மற்றும் கையெழுத்துப் பயிற்சி செய்வதை வழக்கமாக தனகா கொண்டிருந்ததாக கின்னஸ் அமைப்புத் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.