
திண்டுக்கல்: வடமதுரை அருகே ஒரு கிராமத்தில் 4 வயது சிறுமி, சூடு வைத்து துன்புறுத்தி கொடூரமாக சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை கொலை செய்ததாக அந்த கிராமத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (வயது 31), அவரது மனைவி கீர்த்திகா (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கீர்த்திகா அந்த சிறுமியை திருப்பூரை சேர்ந்த பெற்றோரிடம் இருந்து தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமி அடிக்கடி சேட்டை செய்ததால் சூடு வைத்ததாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கியதில் சிறுமி படுகாயம் அடைந்ததாகவும் அந்த தம்பதி தெரிவித்தனர். பின்னர் அந்த சிறுமியை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பிடிபட்ட தம்பதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியானது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் வகையில் பரிசோதனை விவரங்கள் மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ளார்கள். இதையடுத்து ராஜேஷ்குமாரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராஜேஷ்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததையும், அதற்கு அவரது மனைவி கீர்த்திகா உடந்தையாக இருந்ததையும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் இந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்றம் செய்து ராஜேஷ்குமார், கீர்த்திகா ஆகிய 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.