
தனியார் உரக்கடைகளில், யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்கள், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இன்னும் சில நாள்களில் இவற்றின் விலை, பல மடங்கு உயரப்போவதாக அச்சத்தை கிளப்பி, தங்களை உரக்கடைக்காரர்கள் பெரும் குழப்பத்திலும் மன உளைச்சலிலும் ஆழ்த்துவதாக விவசாயிகள் ஆதங்கப்படுகிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசு தெளிவான விளக்கம் அளிப்பதோடு, அதிக விலைக்கு யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்களை விற்பனை செய்யும் தனியார் உரக்கடைக்காரர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.தற்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கோடை சாகுபடிக்கான ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு அடிவுரமாக யூரியா, டிஏபி உள்ளிட்ட உரங்கள் தேவை. தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இந்த உரங்கள் போதுமான அளவு இருப்பு இல்லாததால், பல பகுதிகளில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தனியார் உரக்கடைக்காரர்கள், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் கூடுதலாக விலை வைத்து விற்பனை செய்கிறார்கள். மத்திய அரசு, உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கி வந்த மானியத்தை நிறுத்திவிட்டதால், இந்த உரங்களின் விலை கடுமையாக உயர உள்ளது என விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தி, தாங்கள் சொல்லும் விலைக்கு உரங்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சசிகுமார், “ரசாயன உர நிறுவனங்களுக்கு கொடுத்துக்கிட்டு இருக்குற மானியத்தை மத்திய அரசு நிறுத்தப்போறதா, கடந்த வருஷம் பேச்சு கிளம்பினுச்சி. அதோட தொடர்ச்சியாகதான் கடந்த அக்டோபர் மாசம் பொட்டாஷ் உரத்தோட விலை, 1,000 ரூபாயில இருந்து 1,700 ரூபாயும், காம்ப்ளக்ஸ் உரத்தோட விலை, 1,000 ரூபாயில இருந்து 1,400 ரூபாயும் விலை உயர்ந்துச்சு. இந்த நிலையிலதான் இப்ப கோடை சாகுபடிக்காக, அடிவுரம் போட, யூரியா, டிஏபி தேவைப்படும்போது, இதோட விலையை உரக்கடைக்காரங்க, ஒரு மூட்டைக்கு 200-500 ரூபாய் வரைக்கும் விலையை உயர்த்தி விக்கிறாங்க.மத்திய அரசு, ரசாயனம் உரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்குக் கொடுத்துக்கிட்டு இருக்குற மானியத்தை நிறுத்திட்டதாலே, இன்னும் சில நாள்கள்ல இந்த உரங்களோட விலை கடுமையா உயரப்போவதாகவும், அதனால் இப்ப கொஞ்சம் அதிகமா விலை கொடுத்து வாங்க தயக்கம் காட்டாதீங்கனு உரக்கடைக்காரங்க விவசாயிகள்ட்ட சொல்றாங்க. ஏற்கெனவே பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் கடுமையாக விலை உயர்ந்ததுனால, அதே மாதிரி யூரியா, டிஏபி விலையும் உயர்ந்துடுமோனு விவசாயிகள் பதறிப்போயி கூடுதல் விலை கொடுத்து, இதை வாங்குறாங்க.தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்ல இப்ப போதியளவு உரங்கள் கிடைக்காததுனாலதான் தனியார் உரக்கடைகள்ல அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கு, உண்மையாகவே இன்னும் சில நாள்கள்ல இந்த உரங்களோட விலையும் உயரப்போகுதா, எந்த தேதியில் இருந்து உயரப்போகுது, எவ்வளவு விலை உயரப்போகுதுங்கற தகவல்களை மத்திய, மாநில அரசுகள் தெளிவான விளக்கம் கொடுக்கணும். இப்பவே விலையை உயர்த்தி விக்கிற தனியார் உரக்கடைக்காரர்கள் மேல் நடவடிக்கை எடுக்கணும்’’ என வலியுறுத்தினார்.இது தொடர்பாக தமிழக வேளாண்மைத்துறை செயலாளர் சமயமூர்த்தியிடம் பேசினோம். “நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளின் இந்த புகார் தொடர்பாக, தனியார் உரக்கடைகளில் உடனடியாக ஆய்வு நடத்தப்படும்” என்றார்.